முதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, லெப் கேணல் புலேந்தி அம்மான், லெப் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகள். லெப் கேணல் விக்ரர் ஆகியோருடன் இம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களுக்கும், போராட்டத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்குமான வணக்க நிகழ்வு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மாவீரர் மண்டபத்தில் நடைபெற்றது.
நேற்று (30/10/2016) ஞாயிறு மாலை 04.00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வில், மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை அதிபர் DR. பூதத்தம்பி இராசையா அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பிரித்தானியத் தேசியக் கொடியினை தேசிய செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவை உறுப்பினருமான திரு. நிமலன் சீவரட்ணம் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை போராளி ஒப்பிலான் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் பொதுத்தூபிக்கான ஈகைச்சுடரினை மாவீரர் கப்டன் கரன் அவர்களது உறவினர் செல்வி. அருவி ஜெயக்காந்தன் ஏற்றி வைக்க மலர் மாலையினை போராளி குமணன் அவர்கள் அணிவித்தார்.
போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத்தூபிக்கு உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இயக்குனர்சபை உறுப்பினர் திரு. சுகந்தகுமார் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றிவைக்க, மலர் மாலையினை மாவீரர் இசைவாணன் அவர்களின் சகோதரர் திரு. திலீபன் அவர்கள் அணிவித்தார்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களின் மலர்வணக்க நிகழ்வோடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கலை நிகழ்வுகளாக எழுச்சி கானங்களும், கவிதை, மற்றும் எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்றது.
2ம் லெப். மாலதியுடன் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து ஒன்றாக பயிற்சி பெற்ற முன்னாள் பெண் போராளி ஒருவர் மாலதியின் நினைவுகளை மீட்டு சிறப்புரை ஆற்றினார்.
எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மாவீரர் குடும்பம், மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் நடைபெறும் என்று தமிழீழ மாவீரர் பணிமனை – ஐக்கிய இராச்சியத்தின் சார்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இறுதியாக உறுதியேற்போடு நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.