லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இறுதிக்கட்ட பணியும், மக்கள் சந்திப்பும்!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றுவரும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய ஒன்றுகூடல் ஒன்று லண்டனில் நடைபெற்றது.

வடமேற்கு லண்டன் பகுதியில்  St. Andrew Roxborne மண்டபத்தில் நேற்று (28-02-2016) மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி  நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அமைவிடத்திற்கான காணி கொள்வனவிற்கான நிதியின் மொத்தத் தொகையில், 950,000 பவுண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவு செய்வதற்கான மீதி 450,000 பவுண்டுகளுக்குமான இறுதிக்கட்ட பணிக்கான முக்கிய கலந்திரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைந்திருந்தது.
இனம், மதம், மொழி உள்ளடங்கலாக தமிழர்களின் ஆட்சிகளையும், வீர வரலாறுகளையும் ஒரு மையத்தில் ஆதாரங்களோடு நிறுவி அதனூடாக தமிழையும், தமிழ் இனத்தையும், தமிழர்களுக்கான உரிமைகளையும் சர்வதேசத்தினூடாக பெற்றுக்கொள்வதே இம் மையத்தின் முக்கிய பணியாகும், 
 
இச்சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் மத்தியில் இருந்து 100,000 (ஒரு இலட்சம்) பவுண்டுகள் இத்திட்டத்திற்காக வழங்குவதற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அத்தோடு தாம் மக்கள் மத்தியில் சென்று இவ் வேலைத்திட்டத்தின் முக்கியத்தையும், தேவையையும் தெளிவுபடுத்தி மீதமாக தேவைப்படும் தொகையையும் சேகரித்துத் தருவதாக வாக்குறுதியளித்தமை இத்திட்டத்திட்டம் இனிதே எத் தடைகளும் இன்றி நிறைவுபெறும் என்ற நம்பிக்கையை அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இச்சந்திப்பில் திரு.பாலா, திரு.சுகந்தகுமார், திருமதி.சுதா, திரு.அகிலன், திரு.இன்பன், திருமதி.இரத்தினேஸ்வரி, திரு.சேகர், திருமதி.கலா, ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.
இதேவேளை இவ் ஒன்றுகூடல் இடம்பெற்ற சமகாலத்தில் அங்கு தமிழீழத் தேசியத் தலைவரின் தாயாரான “தேசத்தாய்” பார்வதி அம்மா அவர்களதும், வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களுக்கான நினைவுவணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
இதில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு தமது வணக்கத்தினை செலுத்தினர்.